சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?
Author: Prasad9 April 2025, 11:38 am
வணிக போர்
சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி மிகுந்த நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு நாடாக ஏற்கனவே உருவாகி இருந்தாலும் சீனா சமீப காலமாக அதற்கு இணையான வல்லரசு நாடாக உருவாகி வருகிறது.
அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா 34% பதிலடி வரி விதித்திருந்தது. இந்த வரியை திரும்ப பெற கூறி அமெரிக்காவில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் காலக்கெடுவை விடுத்தார். இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று முதல் அமெரிக்கா தன்னுடைய நாட்டில் இறக்குமதி ஆகும் சீனப் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியில் இருந்து கூடுதலாக 50% வரியை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள வரி 104% ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்திதான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சூப்பர் ஹீரோ பட நிறுவனத்திற்கு ஆப்பு?
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, தன்னுடைய நாட்டில் வெளியாகும் அமெரிக்க திரைப்படங்களுக்கு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் சினிமா மார்க்கெட்டில் முக்கிய வர்த்தக களமாக அமைந்துள்ள நாடு சீனா.
குறிப்பாக ஸ்பைடர் மேன், ஐயன் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும் மார்வெல், DC போன்ற நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வர்த்தக தளமாக சீனா உள்ளது. இந்த நிலையில் சீனா ஹாலிவுட் சினிமாக்களுக்கு அதனுடைய நாட்டில் தடை விதித்தால் ஹாலிவுட் சினிமா துறை மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியால் உலகம் முழுவதிலும் உள்ள சூப்பர் ஹீரோ படங்களின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.