இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
Author: Hariharasudhan10 January 2025, 9:53 am
தனது 80வது வயதில் காலமான பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன், 80களில் அறிமுகமாகி ரசிகர்களை தன் குரலால் தன்வசப்படுத்தியவர்.
சென்னை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் திருச்சூரில் காலமானார். அவருக்கு வயது 80. 80களில் அறிமுகமாகி, விஜயகாந்த் – இளையராஜா கூட்டணியில் ஹிட் அடித்த பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். 1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த பி.ஜெயச்சந்திரன், சென்னைக்கு வந்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பிறகு, மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பாட வாய்ப்புகள் வந்தன.
இவரது குரலில், கடலோர கவிதைகள் என்ற படத்தில் இவர் பாடிய “கொடியிலே மல்லிகப்பூ” பாடல் என்றென்றும் ரசிகர்களின் மனதில் இசைத்துக் கொண்டிருக்கும். மேலும், “கிழக்குச்சீமையிலே” படத்தில் “கத்தாழங் காட்டு வழி”, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் “சின்னப்பூவே மெல்லப்பேசு”, “சொல்லாமலே யார் பார்த்தது” உள்ளிட்ட பாடல்களும் ஜெயச்சந்திரன் குரலில் உருவான காலத்தால் அழிக்க முடியாதவையாக திகழ்கின்றன.
அது மட்டுமல்லாமல், எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் என ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பி.ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த பாடகருக்காக 4 முறை மாநில விருதுகள் ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
நானே ராஜா நானே மந்திரி படத்தில் இடம்பெற்ற ’மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே’, ’ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ உள்பட விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற 3 பாடல்களும் பி.ஜெயச்சந்திரனின் மெல்லிசைக் குரலுக்குச் சொந்தமானவை தான்.