இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…
Author: Prasad29 April 2025, 4:55 pm
நியமன எம் பி இளையாராஜா
இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும் இருக்கிறார். சமீப காலமாகவே இளையராஜா தனது பேச்சுக்களின் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே வருகிறார். பலரும் இளையராஜாவை “ஆணவம் பிடித்தவர்” என விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இளையராஜா “பணத்தாசை பிடித்தவர்” என்று பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும் இது அவரது உரிமை என்று அவரை பலரும் ஆதரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி குறித்து இளையராஜா ஒரு பேட்டியில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தமிழகத்தில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மோடிதான் பெஸ்ட்…
“மௌண்ட் பேட்டன் காலகட்டத்தில் இருந்து இந்தியாவை ஆண்ட ஒவ்வொரு பிரதமரையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இந்தியாவிற்காக என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு பாருங்கள். ஒரு பக்கம் மோடி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளையும் பட்டியலிடுங்கள். இரண்டையும் ஒப்பிட்டாலே யார் சிறந்தவர் என்பது தெரியும்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்தவர் யார்? 1988 ஆம் ஆண்டு நான் காசிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அது வெறும் சிறுநீர் ஓடும் இடமாகத்தான் இருந்தது. அப்படித்தான் காசி விஸ்வநாதன் ஆலயமும் இருந்தது. இந்த மாற்றத்தை யார் செய்தது?
கங்கை புனிதமானது என பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். அதில் மக்கள் பலரும் அறுவெறுப்பான செயல்களை செய்து வந்தனர். மோடிதான் அதனை சரியான திட்டத்துடன் தூய்மைப்படுத்திக்கொண்டு வருகிறார். தேசத்தை காதலிக்காமல் இதனை உங்களால் செய்ய முடியாது. ஒரு வேளை மோடி இந்த தேசத்தை ஆட்சி செய்யக்கூடாது என்று நீங்கள் நீனைக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் வேறு எந்த தலைவரையாவது காட்டுங்கள். யாராவது இருக்கிறார்களா? இல்லை. இதுதான் எனது பணிவான கருத்து” என்று கூறினார்.
மேலும் அப்பேட்டியில் பேசிய இளையாராஜா, “மோடியை நான் ஒருமுறை சந்தித்தபோது அவரிடம் கூறினேன், நீங்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று. அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது” எனவும் கூறினார்.
இவ்வாறு இளையராஜா மோடியை குறித்து பேசியது தமிழக மக்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவரை ஆதரித்து வந்த இவரின் ரசிகர்கள் தற்போது எந்த கருத்தையும் கூற முடியாத நிலையில் ஸ்தம்பித்து இருக்கின்றனர்.