பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…
Author: Prasad3 April 2025, 5:02 pm
மகனை இழந்த இமயம்…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பு செய்தி திரைத்துறையினர் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.
மகனை இழப்பது என்பது தந்தைக்கு மிகப்பெரிய வலி, இறைவன் பாரதிராஜாவிற்கு மன அமைதியையும் தைரியத்தையும் கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் பலரும் மனோஜ் பாரதிராஜாவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

ஆற்றுபடுத்திய கங்கை அமரன்
கங்கை அமரனும் பாரதிராஜாவும் இளம் வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா ஆகிய மூவரும் தங்களது இளமை காலத்தில் தேனீயில் இருந்தபோதே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தவர்கள். கிட்டத்தட்ட மூவரும் ஒரே சமயத்தில் சென்னைக்கு வந்தார்கள்.

இந்த நிலையில் கங்கை அமரன், தனது நண்பரான பாரதிராஜாவை பாட்டு பாடி ஆற்றுப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் பாரதிராஜா நடித்த “கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற சிறு பொன்மணி அசையும் என்ற பிரபலமான பாடலை பாடி பாரதிராஜாவை பழைய நினைவுகளுக்குள் கொண்டு சென்றார் கங்கை அமரன்.
பாடலை பாடி முடித்த பிறகு, அந்த பாடல் எழுதப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார் கங்கை அமரன். இவற்றை எல்லாம் மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக, ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.