இரக்கமின்றி சிவகார்த்திகேயன் அழுத்தம் தருகிறார் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு ..!

Author: Rajesh
31 March 2022, 4:44 pm

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கிஇ தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இதனிடையே மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரிக்கை வைத்துள்ளார். ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!