தல போல வருமா…? உழைப்பால் சாதித்த அஜித்: மெக்கானிக் To மெகாஸ்டார் வரை #HBD AK
Author: Shree1 May 2023, 10:25 am
தமிழ் சினிமாவில் திரைபின்பலமே இல்லாமல் நடிகராக தனது சொந்த உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கொண்டவர் நடிகர் அஜித். தன்னை தானே செதுக்கி செதுக்கி யாரும் எட்டமுடியாத உச்சத்தை தொட்டிருக்கிறார். இவர் இந்த இடத்திற்கு வர ஆரம்ப காலத்தில் இருந்து விடயற்சியை கொண்டு எப்படி சாதித்தார் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1971 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஹைதரபாத்தில் சுப்பிரமணியம்- மோஹினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நடிகர் அஜித்குமார். தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்த அஜித்திற்கு ஆரம்பத்தில் தமிழ் தெரியாது. தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். படிப்பு வராததால் மெக்கானிக் வேலை செய்துவந்த அஜித் அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார்.
அந்த நேரத்தில் பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார்.
பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. 1990 ல் வெளியான என் வீடு என் கணவர் திரைபடத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராக நடித்து அஜித் முதன்முதலாக திரையில் தோன்றினார். அதன் பிறகு 1993ல் அஜித் நாயகனாக நடித்த அமராவதி வெளியானது. இதற்கு முன்பே பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இப்படம் தாமதமாகவே வெளியானதால் அமராவதி தான் இவரின் முதல்படம். முதல் படமே வெற்றி பெற்றது.
பின்னர் அவரது சினிமா பயணத்தில் காதல் கோட்டை மிகமுக்கிய படமாக அமைந்தது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படம் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் ஐந்து பிரிவுகளில் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது. தொடர்ந்து காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன், தீனா, வில்லன், பில்லா, என்னை அறிந்தால், வீரம், வேதாளம், விசுவாசம், நேர்கொண்ட பார்வை , தற்போது விடாமுயற்சி வரை பலப்படங்களில் நடித்துள்ளார்.
அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி அஜித் சிறந்த மனிதர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் படங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதை கூட தவிர்த்து வருகிறார்.
அப்படித்தான் 2010 ஆண்டு கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. இதனிடையே உதவி தேவைபடுபவர்களுக்கெல்லாம் தாமாக முன்வந்து பல உதவிகளை செய்து வருகிறார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வரும் அஜித் ஒரு சிறந்த மனிதர். இன்று 52 வது பிறந்தநாள் கொண்டாடும் அஜித்திற்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.