வள்ளுவருக்கு காவி, ராஜராஜ சோழன் ‘இந்து’ அரசன் : அடையாளங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது… இயக்குநர் வெற்றிமாறன் கொந்தளிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 October 2022, 3:42 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சினிமா பட இயக்குநர் வெற்றிமாறன், “என்னுடைய நண்பர் ஒரு விரிவான ஆய்வை செய்திருக்கிறார். எப்படி இலக்கியம், சினிமா அவர்கள் கையில் இருந்தது? என்பதையும், அவர்களிடம் இருந்து சினிமாவை திராவிட இயக்கம் எப்படி கைப்பற்றியது? என்பதையும் விளக்கி இருக்கிறார்.
திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது.
திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் ‘கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை’ என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள். கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை.
இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.
சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும். அதற்கு நாளை நடப்பதாக இருந்த அந்த நிகழ்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பே மிகப்பெரிய உதாரணம்.
இதுபோல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதற்காக இந்த மேடையை கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் என்னால் முடிந்த சிறிய அளவிலான பங்களிப்பை கொடுப்பேன். கண்டிப்பாக நீங்கள் அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடக்காது.” என்றார்.