முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?
Author: Prasad4 April 2025, 11:24 am
முழு நேர அரசியலில் விஜய்
தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய். வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை விஜய் எதிர்கொள்ளவுள்ள நிலையில் தனது கொள்கை எதிரி என்றும் அரசியல் எதிரி என்றும் அவர் அறிவித்த கட்சிகளை மிகவும் துணிச்சலோடு விமர்சித்து வருகிறார். நேற்று கூட வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஒரு மிக நீண்ட அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இன்று வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக தலைமையில் போராட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் போலீஸார் அப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.
முடியப்போகுது படப்பிடிப்பு
இவ்வாறு தீவிர கள அரசியலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் 15 ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வருகிற மே மாத இறுதி முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிடுவார் என்றும் தெரியவருவதாக கூறப்படுகிறது.
“ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதில் மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.