காந்தியை மன்னிக்கவே மாட்டேன்.. கமல்ஹாசன் பேச்சால் மீண்டும் பரபரப்பு!
Author: Hariharasudhan22 February 2025, 8:58 am
காந்திக்கும், பெரியாருக்கும் சினிமா பிடிக்காது என்பதால், இந்த விஷயத்தில் அவர்களை மன்னிக்கவே மாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் நேற்று மற்றும் இன்று, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற கருத்தரங்கை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்ட ‘ஃபயர்சைட் சாட்’ நிகழ்ச்சி நடந்தது.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “ஹே ராம் த்ரில்லர், வரலாற்றுப் படம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எனக்கு, நான் காந்தியைப் பற்றி படம் செய்ய வேண்டும், அவ்வளவுதான். நான் என் அப்பா சொல்லிக் கொடுத்து காந்தியைக் கற்கவில்லை.
அவருக்கு முன்பே காந்தியைக் கற்றவன் நான். எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும். ஆனால் காந்தி, கூடவே பெரியார் என இருவருக்கும் சினிமா பிடிக்காது. இந்த விஷயத்தில் மட்டும் நான் இருவரையும் மன்னிக்கவே மாட்டேன். நானும், மணிரத்னமும் எப்போதும் இணைந்து பணிபுரிய ரெடியாகத்தான் இருந்தோம்.
காரணம், நாங்கள் இரண்டு பேரும் இணையும்போது, அதிக எதிர்பார்ப்புகள் உண்டாகும். அதனால் தான் நாயகனுக்குப் பிறகு இவ்வளவு தாமதம். நான் நல்லவனா, கெட்டவனா எனக் கேட்டால், என்னுடைய கேமராவில் நான் எப்போதுமே நல்லவன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!
ஹே ராம்: கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய திரைப்படம் ஹே ராம். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கக் கூடிய கதையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்று வரை வைக்கப்படுகின்றன.