லோகேஷுக்கு உளவியல் சோதனைச் செய்யக் கோரிய மனு தள்ளுபடி.. லியோ வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவு!

Author: Hariharasudhan
21 January 2025, 5:59 pm

விஜயின், லியோ படத்தை தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், “விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், கடந்த 2023 அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களைத் தயாரிப்பது பற்றியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு மதச் சின்னங்களைப் பயன்படுத்தி, மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளைப் பழிவாங்க பெண்கள், குழந்தைகளைக் கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்க தகுதியற்ற காட்சிகளும் அதிகம் உள்ளது.

இவற்றைப் பார்க்கும் இளம் சிறார்கள் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது போன்ற படங்களை தணிக்கைத் துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.

Leo Ban case quashed by MHC Bench

எனவே, லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு மீது வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டங்களின் படி உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், லியோ படத்தை முற்றிலும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ‘அரசியலுக்காக குழப்பத்தை ஏற்படுத்தும் விஜய்’.. தமிழிசை கேள்வி!

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லியோ படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல, விளம்பர நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடபட்டது. இதனையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply