இயக்குனர் மாரி செல்வராஜ்:
வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாழை. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தவர் மாரி செல்வராஜ்.
அடிதட்டு மக்களின் ஜாதிய அடிப்படையில் வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மேல் சாதியினரின் அடாவடித்தனத்தையும், ஆணவத்தையும் தோலுரித்துக் காட்டியது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்த மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.
வெற்றி திரைப்படங்கள்:
பின்னர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்று பல பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.
மாரி செல்வராஜின் வாழ்க்கையை பேசும் வாழை:
இப்படத்தில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்களையும் மிக முக்கியமான நிகழ்வுகளையும் பேசும் என கூறப்படுகிறது. தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் நிகிலா விமல் ,திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் பேச்சு:
இன்று இப்படம் வெளியாகி உள்ள நிலையில் வாழை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திருநெல்வேலியில் பார்த்த மாரி செல்வராஜ் படம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ‘வாழை படம் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுத்திருக்கிறேன். இது அனைவரையும் மனம் கனத்துப்போக செய்யும்.
மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மாதிரியான இடத்திலிருந்துதான் மாரி செல்வராஜ் என்பவன் கிளம்பி வந்தான் என்பதை இந்தப் படம் உணர்த்தும். இந்தக் காலத்திலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்ததாக தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்குகிறேன். அடுத்து தனுஷை வைத்து இயக்குகிறேன். மேலும் ரஜினியுடனான படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்றார்.