பாபா படம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஸ்பெஷல்.. ஆன்மீகம் சார்ந்த புரிதல் நிறையவே இருப்பதால் எல்லாரும் Enjoy பண்ணுவாங்க..- லதா ரஜினிகாந்த்..!
Author: Vignesh10 December 2022, 12:50 pm
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது பாபா படம் மீண்டும் புதுப்பொலிவுடன் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் பாபா படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் பாபா படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. அதிகாலை 4 மணி காட்சிகளும் பல திரைப்படங்களில் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடந்த இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் தயாரிப்பாளர் கலைப்புலி S தானு, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி, லதா ரஜினிகாந்த், “இது மனம் நிரம்பிய அனுபவம். 20 வருடம் முன்பு இருந்ததை விட பல மடங்கு எமோஷனலாக இருக்கிறது. ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது, அவரை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் என் குடும்பத்தை சார்ந்தவர்களாகவே தெரிகிறார்கள்.
இது ஒரு பெரிய குடும்பம். பாபா திரைப்படம் கண்டிப்பாக அவருக்கும் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஸ்பெஷல். தற்காலத்தில் ஆன்மீகம் சார்ந்த புரிதல் நிறையவே இருப்பதால், அனைவரும் நிச்சயமாக படத்தை பார்த்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.