சர்தார் 2 விபத்து; கண்டு கொள்ளாத தயாரிப்பு நிறுவனங்கள்; பெப்சி போட்ட கண்டிஷன்

Author: Sudha
23 July 2024, 12:18 pm

சமீபத்தில் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பில் சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். போதிய பாதுகாப்பு இல்லாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு திரைப்பட தொழிலாளர்களுக்கு போதிய இன்சூரன்ஸ் ஏற்பாடுகளும் இல்லை என்கிறார்கள்.

சமீபகாலமாக படப்பிடிப்புகளில் விபத்து ஏற்பட்டு அதனால் மரணங்களும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பின் போதும் இதே போன்று விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 17ம் தேதி சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார். படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும் மற்றும் ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும் என்று பலமுறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறோம்.

சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை. எனவே நமது இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகிற 25ம் தேதி வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக வருகிற 25ம் தேதி அன்று சென்னையில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடைபெறாது.

வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளிலும் காலை 9 மணி முதல் 10 மணிவரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?