இருட்டு அறையில் முரட்டு குத்துனு நினைச்சீங்களா.. பருத்தி வீரன் பஞ்சாயத்தில் ஞானவேல் ராஜாவுக்கு பொன்வண்ணன் சுளீர்!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 10:11 am

பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில் அப்படத்தில் நடித்த பொன்வண்ணன் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி, கஞ்சா கருப்பு, பொன் வண்ணன், சரவணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘பருத்தி வீரன்’. நடிகர் கார்த்தி அறிமுகமான இப்படம் பட்டித்தொட்டியெங்கும் தாறுமாறு ஹிட் அடித்தது. ஆனால் இந்த படம் தொடர்பாக அன்றைய காலக்கட்டத்தில் நடந்த பிரச்சினை ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. பருத்தி வீரன் படம் தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுகளை அமீர் மறுத்தார். மேலும் அமீருக்கு ஆதரவாக நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி, இயக்குநர் சுதா கொங்காரா உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் பருத்திவீரனில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்த பொன்வண்ணன் என்ன நடந்தது என்பதை விளக்கியும்,தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பதிவு ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!

பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.

நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.
படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..!

அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவு கோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற
ஆசைகளுடன்..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 342

    0

    0