புதுச்சேரியில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறாரா விஜய்..? பீஸ்ட் போஸ்டர்களால் பரபரப்பில் அரசியல் களம்…!!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 12:40 pm

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி-விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பிடித்துள்ளது புதுச்சேரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய்யை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்க தலைவருமான புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்து வந்தார்.

இதனிடையே, டிவியில் நடிகர் விஜய்யின் படங்களை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பார்ப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரமாண்ட கட்அவுட் – பேனர்கள் அமைத்துள்ளார்கள். குறிப்பாக பெரும்பாலான பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி படமும், சமீபத்தில் ரங்கசாமி விஜய்யை சந்தித்த படமும் இடம்பெற்றிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று ஒருபுறம் கூறப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது பெரும் பேசுபொருளானது. அதாவது, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, தனது இயக்கத்திற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க, நடிகர் விஜய்யின் மறைமுக நடவடிக்கைகள்தான் இது என்றெல்லாம் கூறப்பட்டது.

மேலும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன், நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதும், அவரது அரசியல் பிரவேசத்திற்கு மேலும் மெருகூட்டியது. தமிழகத்தில் அரசியல் களத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கியது போன்று, புதுச்சேரியிலும் கால்பதிப்பதற்கான முயற்சிகளா..? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதேவேளையில், முதலமைச்சர் ரங்கசாமியுடனான சந்திப்பு, பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் திரையரங்குகளில் வெளியிடுவது பற்றியும், டிக்கெட் விலை நிர்ணயிப்பது பற்றியதாகத்தான் இருக்கும் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ