இந்தியில் கூட ‘நாராயணா’… தமிழில் மட்டும் ‘ஐய்யய்யோ’-வா… சர்ச்சைக்குள்ளான பொன்னியின் செல்வன் படக்காட்சிகள்..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan19 September 2022, 3:42 pm
பொன்னியின் செல்வன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக மணிரத்னம் இயக்கி உள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், கிஷோர், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
70 ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலர் எடுக்க முடிந்தும் முடியாமல் போன நிலையில், தற்போது வெளியாக உள்ளது. சரித்திர படமாக உருவாகி உள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் தமிழக வெளியீட்டு உரிமை இழுபறியில் உள்ள நிலையில், ஓவர்சீஸ், ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா வியாபாரங்களை லைகா முடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆழ்வார்கடியான் குதிரை வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, எதிராளிகள் அம்பு எய்து தாக்குதல் நடத்தப்படும் காட்சி அந்த டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும்.
அப்போது, அச்சத்தில் ஆழ்வார்கடியானான ஜெயராம், நாராயணா என்று சொல்வார். குறிப்பாக, இந்தி, கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளில் நாராயணா என்ற பொதுவான சொல்லே அமைந்துள்ளது. ஆனால், இதன் தமிழ் டப்பிங்கில், நாராயணா என்பதற்கு பதிலாக ஐய்யய்யோ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ‘தமிழ் மொழியில் நம்பி நாராயணா என்று சொல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என இயக்குநர் மணிரத்னம் சொல்வது போன்ற மீம்ஸ்-ம் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் வெளியீட்டு உரிமையை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது. எனவே, சினிமா துறையில் திமுகவின் ஆதிக்கம் இருப்பதாக எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே இந்துக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக, திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் இந்துக்களுக்கு எதிராக நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்து கடவுளை குறிக்கும் நாராயணா என்ற வார்த்தை பிற மொழிகளில் இடம்பெற்ற நிலையில், தமிழ் மொழியில் மட்டும் நீக்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.