சூர்யாவுக்காக பூஜா ஹெக்டே எடுத்த முக்கிய முடிவு.. ரெட்ரோ அசத்தல் அப்டேட்!
Author: Hariharasudhan11 March 2025, 9:55 am
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தனது சொந்தக் குரலில் முதன்முறையாக டப்பிங் பேசவுள்ளார்.
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, கருணாகரன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தினை சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படம் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கவுள்ளன. மேலும், இப்படத்துக்காக முதல் முறையாக தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
பிராந்திய மொழி படங்களில் முதன்முறையாக ரெட்ரோ படத்துக்காகவே பூஜா இந்த முயற்சியை எடுத்துள்ளார். முன்பு, இந்தக் கதையைக் கேட்டவுடன், இதற்காக தமிழ் வசனங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இதனை மனதில் வைத்துதான் டப்பிங்கும் அவரே செய்யட்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும், அவர் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்திலும் பூஜா நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: உயிரைப் பறித்த ஆன்லைன் டயட் டிப்ஸ்.. கேரளா பெண்ணுக்கு சோகம்!
அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் பிரமாண்டமாக வெளியானது கங்குவா. ஆனால், இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே, 5 வருடங்களாக தியேட்டர் ஹிட் கொடுக்காத சூர்யா, ரெட்ரோவில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.