கதை எழுதாத பிரதீப்.. ஸ்ட்ரிட்டாகச் சொன்ன சார்.. யார் தெரியுமா?
Author: Hariharasudhan19 February 2025, 8:57 am
தன்னுடைய கல்லூரித் தேர்வுத்தாளை பகிர்ந்துள்ள இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், வித்தியாசமான புரோமோஷனில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கல்லூரியில் எழுதிய தேர்வுத் தாளை பகிர்ந்து, அதில் அவரது ஆசிரியர் தேர்வில் கதை எழுத வேண்டாமெனக் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பதிவில், “ஆசிரியர் என்னைத் தேர்வில் கதை எழுத வேண்டாமெனக் கூறினார். ஆனால், நான் கதை எழுதுவதையே எனது தொழிலாக மாற்றிக்கொண்டேன். இந்தத் தாளில் அழகான கமெண்ட் எழுதியது என்னுடைய ஆசிரியர் அருள் என்பவர். பின்குறிப்பு: இது அலகுத் தேர்வுதான். முக்கியமான தேர்வுக்கு நன்கு படித்தேன்” எனக் கூறியுள்ளார்.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இப்படத்தில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க கல்லூரி காதல் கதையாக உருவாகியுள்ள இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்னதாக, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
மேலும், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எனும் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், டிராகன் பட புரோமோஷன் பணிகளுக்கு இடையே, படத்தின் கதைக்காக, தனது தேர்வுத்தாளை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.