30 வருஷ நட்புனா சும்மாவா? ஜெயிலுக்கே சென்று சந்திரபாபுவை சந்திக்கும் ரஜினி!!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2023, 10:07 pm
30 வருஷ நட்புனா சும்மாவா? ஜெயிலுக்கே சென்று சந்திரபாபுவை சந்திக்கும் ரஜினி!!!
ஆந்திராவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். அவருக்கு செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். எனது நண்பர் சந்திரபாபு நாயுடு எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்ற பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை சிறைக்கு சென்று நேரில் சந்திக்க அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரஜினிகாந்த் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறைத்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாளை ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் சந்திப்பார் எனத் தெரிகிறது.
ரஜினிகாந்த் – சந்திரபாபு இடையேயான நட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலானது. அண்மையில் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ரஜினிகாந்த், எனக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் 30 ஆண்டுகால நட்பு இருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவை எனக்கு என்னுடைய நண்பர்களில் ஒருவரான மோகன் பாபு அறிமுகம் செய்துவைத்தார். அன்று முதல் நான் ஹைதராபாத் வரும் ஒவ்வொரு முறையும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசுவேன். இப்போது வரை என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அவர் தவறியதே கிடையாது.
சந்திரபாபு நாயுடுவுடன் பேசும்போது என்னுடைய அறிவு விரிவடையும். அந்த அளவுக்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கியிருக்கும். எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்வது பற்றியே அவரது பேச்சு இருக்கும். சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி.
இதன் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோது அந்தத் துறை பற்றி புரிந்துகொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஹைதராபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.