ரஜினி – ஜெயலலிதா நடிக்க இருந்த படம் இதுவா? நடிக்காததற்கு ஜெயலலிதாவே சொன்ன காரணம்!
Author: Hariharasudhan24 February 2025, 12:56 pm
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா, இன்று (பிப்.24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், “இதோடு 4வது முறையாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்துள்ளேன். நானும், ஜெயலலிதாவும் சேர்ந்து ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அப்போது என்னைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டார். அப்போதுதான் இங்கு முதல் முறையாக வந்தேன்.
இரண்டாவது முறையாக ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பதற்காக வந்தேன். 3வது முறையாக, என் மகளுடைய திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தேன். இந்த நிலையில், இன்று நான்காவது முறையாக வந்திருக்கிறேன்.
ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் என்றும் நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில், அவருக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான இனிப்பான, சுவையான நினைவுகளோடு உள்ளேன். அவருடைய நாமம் எப்போதும் வாழ்க” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோளக்காட்டில் 10ம் வகுப்பு மாணவி.. 12ம் வகுப்பு மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கரூரில் அதிர்ச்சி!
ரஜினி – ஜெயலலிதா படம்: 1980, ஜூன் 10 எனத் தேதியிட்ட போயஸ் கார்டன் லெட்டர்ஹெட்டில், “சில நல்ல வாய்ப்புகளை நான் விட்டுள்ளேன். பாலாஜியின் பில்லா படத்தில், ரஜினிகாந்துக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பு என்னிடமே வந்தது. நான் அதனை நிராகரித்தப் பிறகுதான், அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீ பிரியா நடித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டில் சலீம் ஜாவத் எழுத்தில் அமிதாப் பச்சம் நடிப்பில் வெளியான டான் என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காக, பாலாஜி தயாரிப்பில் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1980ல் வெளியான படம் பில்லா. இந்தப் படத்தின் வாய்ப்பைத்தான் ஜெயலலிதா நிராகரித்துள்ளார்.