விஜயகாந்த் உண்மையாகவே ஒரு கேப்டன்.. அஞ்சலி செலுத்திய பிறகு நா தழுதழுக்க பேசிய ரஜினி..!
Author: Vignesh29 December 2023, 11:47 am
கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.
இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பிற்பகல் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி கோயம்பேடு வந்தடைய இருக்கிறது.
இந்நிலையில், தனது திரையுலக நண்பரான விஜயகாந்தின் உடலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன்பின் பேட்டி அளித்த ரஜினிகாந்த் ஒருமுறை பழகினால் விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. விஜயகாந்த் அனைவர் மீதும் கோபப்படுவார் நண்பர்கள் மீது, உறவினர்கள் மீது, மக்கள் மீது கூட ஆனால், அவர் மீது யாரும் கோபப்பட மாட்டார்கள். விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர்.
ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் உடம்பு சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போது, ரசிகர்கள் ஹாஸ்பிடல் முழுவதும் சூழ்ந்து கொண்டு பெரிய கூட்டம் கூட்டினாங்க என்ன செய்யறதுன்னு என் குடும்பத்துக்கு தெரியல, அங்கே வந்த விஜயகாந்த் என்ன பண்ணுவார், ஒரு செகண்ட்ல மொத்த கூட்டத்தையும் விரட்டி அடித்துவிட்டார்.
இங்கே பக்கத்தில் எனக்கும் ஒரு ரூம் போடுங்க நான் பார்த்துக்கிறேன் என சொன்னவர் விஜயகாந்த். அவர் உண்மையாகவே ஒரு கேப்டன் தான் எத்தனை ரன்கள் அடிக்க முடியும் சினிமாவிலும் அரசியலும் அவர் அடித்து சாதனை புரிந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ரஜினிகாந்த் நா தழுதழுக்க உருக்கமாக பேசினார்.