தேசிய விருதை திருப்பி கொடுத்த திருடன்.. ஒரு மனசாட்சி இருந்திருக்கு பாரேன்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh13 February 2024, 2:28 pm
மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். தலைமைக் காவலரான தந்தையின் பணி நிமித்தம் பல ஊர்களுக்கு இடம்பெயரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் படிப்பை முடித்தபின், வாகன பொறியியலில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார். தொடக்கத்தில், திருமண ஒளிப்படக் கலைஞராக அவர் பணியாற்றினார்.
பின்னர் இயக்குனர் எம். மணிகண்டன் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார். இவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் முதலில் விண்ட் (2010) என்ற குறுப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய காக்கா முட்டை திரைப்படமானது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இது 2015 இல் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.
அதன் பிறகு குற்றமே தண்டனை ஆண்டவன் கட்டளை கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கடைசி விவசாயி படத்திற்காக இயக்குனர் மணிகண்டனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணிகண்டன் அவரது படத்தின் பணிகளுக்காக சென்னையில் குடும்பத்துடன் இருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி எழில் நகரில் இருக்கும் வீடு பூட்டி இருந்திருக்கிறது. அந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து இருக்கின்றனர். 5 சவரன் நகைகள் ஒரு லட்சம் பணம் ஆகியவை திருடு போயுள்ளது. போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று திருடப்பட்ட அதாவது, மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பதக்கங்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். அதுவும் எப்படி தெரியுமா செய்த தவறுக்காக மன்னிப்பு கடிதம் எழுதி அதை கொள்ளையடித்த பதக்கத்தை கொள்ளையர்கள் தொங்கவிட்டு சென்றுள்ளனர். அந்த கடிதத்தில், ஐயா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு என எழுதியுள்ளனர். இந்த விஷயம் தற்போது இணையதளத்தில் படு வைரலாகி வருகிறது.
இது பற்றி அறிந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் திருடியவனுக்குள்ளும் ஒரு மனசாட்சி இருந்திருக்கு பாரேன் என்றும், என்ன மனுஷன்யா என ஏகப்பட்ட மீம்ஸ்களையும் கமெண்ட்களையும் போட்டு உள்ளனர். மேலும், இயக்குனர் மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடனை பாராட்டி வருகின்றனர். மேலும், கண்டிப்பாக போலீசார் திருடனை கண்டுபிடித்து நகைகளையும் பணத்தையும் விரைவில் மீட்பார்கள். தேசிய விருதுகளை திருப்பிக் கொடுத்த நல்ல மனசுக்காக வேண்டி ஏசி ஜெயில்ல போட சொல்லலாம் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.