நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…
Author: Prasad5 April 2025, 3:27 pm
இயக்குனர் டூ காமெடி நடிகர்
அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து வேறு எந்த திரைப்படத்தையும் இவர் இயக்கவில்லை. ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வருகிறார் சிங்கம்புலி.
இவரது நடிப்புக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “மாயாண்டி குடும்பத்தார். இத்திரைப்படத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நகைச்சுவ கதாபாத்திரத்தில் நடித்த சிங்கம்புலி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதனை தொடர்ந்து “மனம் கொத்தி பறவை”, “தேசிங்கு ராஜா” போன்ற பல திரைப்படங்களில் அவரது காமெடி காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இவரது அடுத்த பரிணாமமாக “மகாராஜா” திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சிங்கம்புலி, “மாயாண்டி குடும்பத்தார்” திரைப்படத்தில் தான் நடித்தது குறித்தான ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன்…
“சீமான் அண்ணன் உனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளரை சொல்கிறேன், கதையை மட்டும் தயார் செய்து வை என்று என்னிடம் ஒரு முறை கூறினார். அதன் பின் சீமான் அண்ணனுடனே சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இயக்குனர் இராசு மதுரவன் சீமான் அண்ணனை பார்க்க வந்தார். 10 இயக்குனர்களை சேர்த்து ஒரு படம் பண்ணப்போகிறோம், என்று சொல்லி சீமான் அண்ணனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
அதன் பின் சீமான் அண்ணன், இராசு மதுரவனுக்கு ஃபோன் செய்து, சிங்கம்புலி பக்கத்து அறையில்தானே இருந்தான், அவனை பார்க்கவில்லையா நீ? என கேட்டார். அப்படியா நான் கவனிக்கவில்லையே என்று சொன்ன இராசு மதுரவன் மீண்டும் அறைக்கு வந்தார். நான் அமர்ந்திருப்பதை பார்த்து, என்னடா நீ இங்கதான் இருக்கிறாயா, உன்னை பார்க்கவில்லையே நான் என கூறி எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். இந்த படத்தில் நீ ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்ன ரோல் என்று கேட்காதே, இப்போது சொன்னால் நீ மறுத்துவிடுவாய் என கூறினார்.

நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். அதன் பின் மணிவண்ணன் சாரிடம் சென்று கூறிவிட்டார். மணிவண்ணன் சார் எனக்கு ஃபோன் செய்து, ரெண்டு நாள் சும்மா வா, நம்ம ஊரு உசிலம்பட்டி பக்கம்தானே போறோம். அப்படியே சாப்புட்டு கீப்புட்டு வருவோம் என்று என்னை அழைத்துக்கொண்டு போனார். இரண்டு நாள் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போய் என்னை கொஞ்சம் கொஞ்சமாக சம்மதிக்க வைத்து 47 நாட்கள் என்னை வைத்து படமாக்கிவிட்டார்கள்” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
“மாயாண்டி குடும்பத்தார்” திரைப்படத்தை இராசு மதுரவன் இயக்கியிருந்த நிலையில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், ஜகன்னாத், தருண் கோபி, ஜிஎம் குமார், ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி, ராஜ்கபூர் போன்ற 10 இயக்குனர்கள் இதில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
