முகத்துக்கு நேராகவே என்னிடம் அப்படி கேட்டனர்.. கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்!
Author: Hariharasudhan7 January 2025, 3:17 pm
இந்த துறையில் என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த துறையில் என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுவினர் அதில் மகிழ்ச்சி அடையவில்லை.
இந்தத் துறைக்கு வருவதற்கு அவர் (SK) யார் எனக் கேட்டனர். இன்னும் சிலர், என் முகத்துக்கு நேராகவே ‘இந்தத் துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டனர். அவர்களுக்கு நான் எந்தப் பதிலும் சொல்வதில்லை. நான் சிரித்துக் கொண்டே கடந்து விடுகிறேன்.
என்னுடைய வெற்றியின் மூலம் அவர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. ஏனென்றால் என் வெற்றி அவர்களுக்கானது அல்ல, என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பைப் போடும் என்னுடைய குழுவினருக்கானது. வெற்றியோ, தோல்வியோ என்னைக் கொண்டாடும் என் ரசிகர்களுக்கானது.
‘உங்களைப் போல நாங்களும் வர வேண்டும் அண்ணா’ எனச் சொல்லும் மக்களுக்கானது. கடந்து செல்வது மட்டுமே அவர்களைக் கையாள்வதற்கான ஒரே வழி. சமூக வலைத்தளங்களில் சிலர், என் படம் தோல்வியடைந்தால் அதற்குக் காரணம் நான் தான் எனக் கூறி என்னை தாக்குவார்கள், ஆனால், படம் வெற்றி அடைந்தால் என்னைத் தவிர மற்ற எல்லாரையும் பாராட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பலமுறை சிறைக்குச் சென்றவர் விஜய்.. வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த திமுக அமைச்சர்!
சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், சிவகார்த்திகேயன் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்காரா ஆகிய இயக்குநர்கள் உடன் சிவகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார்.