காலம் கடந்து வாழும் மலைச்சாமி; 40 ஆண்டுகளைக் கடந்து மக்கள் மனதில் நின்ற அதிசயம்,..

Author: Sudha
21 ஜூலை 2024, 6:02 மணி
Quick Share

முதல் மரியாதை திரைப்படம் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து வாழ்கிறது.1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்தது முதல் மரியாதை திரைப்படம்.

முதல் மரியாதை திரைப்படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று தெரிந்து கொள்ளலாம்.

பிரபல ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவ்ஸ்கி, கடனில்சிக்கி, சிறைசெல்ல வேண்டிய நிலைநேரிட்டது. மூன்று மாதங்களில், ஒருநாவலை எழுதி, கடனாளரிடம் அளித்தால், அவர் சிறைசெல்ல வேண்டியதில்லை என ரஷ்யநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஸ்தாவ்ஸ்கி, நாவலை எழுத ஒப்புக்கொண்டார். அவர் நாவலாகக் கூறுவதை எழுத, அன்னா என்றபெண், உதவியாளராக நியமிக்கப்பட்டார். இருவருக்குமிடையே 40 வயது வித்யாசமிருந்தது. ஆரம்பத்தில், அன்னாவிற்கு, வேலைமீதும், தஸ்தாவ்ஸ்கி மீதும் அலுப்பும், கடுப்பும் இருந்தாலும், நாட்கள் போகப்போக, தஸ்தாவ்ஸ்கியின் பண்பிலும், அறிவுத்திறமையிலும் மெய்மயங்கிப்போய், அவரை மனதாரக் காதலிக்க ஆரம்பித்தார். நாவல் நிறைவடைந்து வெளியாகி, பெரும்புகழைப்பெற்றது. அந்த நாவல்தான் “தி கேம்ப்ளர்” (The gambler) என்பதாகும். கடன்பிரச்சினை தீர்ந்தது. அன்னா, தாஸ்தாவ்ஸ்கியிடம், அவர்மீதான தன் காதலை வெளியிட்டார். இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டு, இரு குழந்தைகளையும் ஈன்றனர். அன்னா, தாஸ்தாவ்ஸ்கி இறந்தபிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தும், மறுமணமே செய்துகொள்ளாமல், தான் இறக்கும்வரை, அவர் நினைவுடனேயே வாழ்ந்தார். இந்த சம்பவம், முதல்மரியாதை படத்தின் கதை−வசன ஆசிரியரான ஆர்.செல்வராஜ் மனதில், பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை, கிராமியக்கதையாக, உருவாக்கினார்.

இந்த கதையை பாரதிராஜாவிடம் கூற, அவருக்குக் கதை பிடித்துப்போகவே, அவர் அதில் சில திருப்புமுனை சம்பவங்களைச் சேர்த்து, தன்சொந்த தயாரிப்பில் படமாகத் தயாரித்தார். .

32 நாட்களில், முதல்மரியாதை படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்மரியாதை படத்தில், சிவாஜிகணேசன் வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் ராஜேஷை நடிக்க வைக்க பாரதிராஜாவும், ஆர்.செல்வராஜும் விரும்பினர்.எனினும், விநியோகஸ்தர்கள் அதை ஏற்கவில்லை. பிறகு அணுகப்பட்டவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர், மறுத்த பின்புதான், சிவாஜி, அவ்வேடத்திற்குத் தேர்வானார்.

ராதா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ராதிகா. அவர், அப்போது, “சுவாதிமுத்யம்” என்ற தெலுங்குப்படத்தில் நடித்துவந்ததால், அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.ஆயினும், ராதாவிற்கு, முதல் மரியாதை படத்தில் பின்னணி குரல்கொடுத்தவர் ராதிகாதான்.

முதல்மரியாதை படம்தான் வைரமுத்துவிற்கு, வெட்டிவேரு வாசம்” பாடலுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதை, முதன்முதலில் பெற்றுத்தந்தது.

முதல்மரியாதை படம், வெற்றிபெறும் என்று படப்பிடிப்புக்குழுவினருள் பெரும்பாலானோர் நம்பவில்லை. பாரதிராஜா, உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இளவரசு, உள்ளிட்ட மிகச்சிலர் மட்டுமே படம்வெற்றிபெறும் என்று நம்பினர். இளையராஜாவிற்கும், படவெற்றி குறித்து சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் தன் நண்பருக்காக, இப்படத்தில் தன் பங்களிப்பை மிகச்சிறப்பாக வழங்கினார். முதல்மரியாதை, சிவாஜிகணேசன் நாயகனாக நடித்த படங்களுள், இறுதி வெள்ளிவிழா படமாக அமைந்தது.

சிவாஜிகணேசனுக்கே படப்பிடிப்பு சமயத்தில், படம்குறித்த ஒருவித அதிருப்தியும், கோபமும், இலேசான அவநம்பிக்கையும் இருந்தது. தான் நடித்த எந்த படத்தையும், முழுமையாகப் பார்த்தபின்பே, சிவாஜிகணேசன், டப்பிங் பேசுவார். ஆனால், இப்படத்தை, முதல்முறையாக சிவாஜி பார்த்தபோது, சில ரீல்கள் பார்த்தவுடன், மின்தடை ஏற்பட்டதன் காரணமாகப் பார்க்க இயலவில்லை. எனினும் அவற்றைப் பார்த்த மறுவிநாடியே, மெய்சிலிர்த்து, படத்திற்கு டப்பிங் பேசினார். படத்தையும், பாரதிராஜாவையும், வெகுவாகப் புகழ்ந்தார்.

வடிவுக்கரசியின் படங்களுள், மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது முதல்மரியாதை. மதுரை வட்டார பாணியிலான வசனங்களை உச்சரிப்பதும், உச்சரிக்கும்பாணியும், வில்லிவேடத்தில் நடித்த வடிவுக்கரசிக்குக் கஷ்டமாக இருந்தது. பலமுறை படத்திலிருந்து விலக முயன்றார். பாரதிராஜாதான் அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்கவைத்திருக்கிறார்.

முதல்மரியாதை படத்தின் கதை−திரைக்கதை−வசன ஆசிரியரான ஆர்.செல்வராஜ் அவர்களுக்கு, பாரதிராஜா வழங்கிய முன்பணம் ஒருலட்சம் ரூபாய். இப்படத்தில் இடம்பெற்ற சில பழமொழிகள், வட்டார வழக்குச் சொற்கள் ஆகியவற்றை எழுத உதவியவர், எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

  • Edappadi - Updatenews360கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கில் செலவு.. ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கல.. இபிஎஸ் கண்டனம்!
  • Views: - 97

    0

    0