கொலை கொள்ளை ; மக்களிடம் மரண பயம் ஏற்படுத்திய பவாரியா; நடுங்க வைத்த தீரன்,..
Author: Sudha11 July 2024, 4:44 pm
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஹெச் வினோத். அவர் இயக்கி மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படம் தீரன் அதிகாரம் ஒன்று.இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேரும் தீரன் (கார்த்தி), தன்னுடைய நேர்மையான செயல்பாடுகளின் காரணமாக பல இடங்களுக்கும் மாற்றம்செய்யப்படுகிறார்.
பொன்னேரிக்கு மாற்றம் செய்யப்படும்போது, மிகக் கொடூரமான முறையில் ஒரு கொலை – கொள்ளை சம்பவம் அங்கு நடக்கிறது. அதனை விசாரிக்க ஆரம்பிக்கும் தீரனுக்கு, அதுபோலவே பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருப்பது தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் தீரன். வட இந்தியாவைச் சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றுதான் இதில் ஈடுபடுவது தெரிந்தாலும் அவர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
ராஜபுத்திர குலத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் பாவாரியா இனத்தர்.
1881 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பவாரியாக்களை வேட்டையாடும் சமூகம் என்று விவரித்தது, அவர்கள் காட்டு விலங்குகளை வலையில் சிக்க வைக்கும் பவார் அல்லது கயிறு என்ற வார்த்தையிலிருந்து தங்கள் பெயரைப் பெற்றனர்.
பவாரியாக்கள் “குற்றங்களுக்கு மிகவும் அடிமையானவர்கள்” என்றும், திருடுவது அவர்களுக்கு எளிதில் வந்து விடும் என்றும், “வன விலங்குகளைக் கண்காணிப்பதில் அவர்களின் திறமை குறிப்பிட தக்கது” என்றும் சொல்லப் படுகிறது.
இவர்கள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு லாரி மூலம் சரக்குகளைக் கொண்டு வரும் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். சரக்குகளை உரிய இடங்களில் இறக்கிய பிறகு, அருகில் உள்ள பணக்கார வீடுகளைக் குறி வைத்துத் தாக்குவார்கள். தேவையற்ற வன்முறையின் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்துவார்கள். இதுவே இவர்கள் செயற்படும் முறை.
பவாரியா நடவடிக்கை என்பது 1995-2006 காலகட்டத்தில், தென்னிந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய கொள்ளை, கொலைச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
பவாரியா கொள்ளைக் கூட்டத்தினர் பலவித குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். அவர்கள் லாரி கும்பல் என்றும் அழைக்கப் பட்டனர். இவர்கள் தாங்கள் உருவாக்கிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை மிகவும் கொடூரமாக கொல்பவர்கள் என்பதை அவர்கள் கொள்ளையடித்த விதத்தில் இருந்து அறிய முடிந்தது.
தென்னிந்தியர்கள் தங்க நகைகள் அணியும் வழக்கம் மிகுந்து இருப்பதால் அவர்கள் தென்னிந்தியாவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளைக் கண்காணித்து குறிவைத்துக் கொள்ளையடிப்பார்கள் .
இக்கொள்ளையர்களின் தாக்குதலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சேலம் மாவட்ட காங்கிரசு செயற்குழுத் தலைவர் தாளமுத்து நடராசன், திமுக அரசியல்வாதி கசேந்திரன் போன்று நன்கு அறியப்பட்ட அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்.
திருப்பெரும்புதூரில் கொள்ளையடிக்கும் போது, ஒரு பள்ளி மாணவியைக் கொன்றதுடன் அவளது பெற்றோர்களைக் கடுமையாகத் தாக்கி காயமாக்கினார்கள். ஒன்பது மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் பவாரியா கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர்.
2000களின் தொடக்கத்திலிருந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவந்தன.
இந்தக் கும்பலைப் பிடிக்க, தமிழக அரசு அப்போதைய ஐ.ஜியான எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படையை அமைத்தது.
உத்தரப்பிரதேச காவல்துறை, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தமிழக காவல்துறை ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடத்தியதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த பஸுரா பவரியா, விஜய் பவரியா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒமா பவாரியா, லட்சுமணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடைபெற்று, சிலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.