டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

Author: Prasad
5 April 2025, 7:03 pm

மெகா வசூல்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. ரூ.37 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கோலிவுட்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக இது அமைந்தது. 

திரைப்படம் கூற வந்த செய்தி மாணவர்களுக்கு முக்கியமான அறிவுரை என்பதால் இத்திரைப்படத்தை பெற்றோர்களும் கொண்டாடத் தொடங்கினர். ஆதலால் இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. 

குறிப்பாக இத்திரைப்படத்தில் நடித்த கயது லோஹர், கோலிவுட் இளம் ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் மிஷ்கினின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த அனுபவத்தை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.

கடுப்பேத்திட்டாங்க…

“குடும்பத்தோடு டிராகன் படம் பார்க்க போயிருந்தோம். எங்களுக்கு பின்னால் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். திரைப்படத்தில் அடுத்து வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அவர்களை திரும்பி பார்த்து எக்ஸ்கியூஸ்மி அடுத்து என்ன காட்சி வரப்போகிறது என சொல்கிறீர்களா? என கடுப்பில் கேட்டேன். 

ஆனால் அதன் பிறகும் அவர்கள் அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனது மனைவி என் கையை பிடித்துக்கொண்டு தயவு செய்து கோபப்பட்டு விடாதே என்று கூறினார்” என அப்பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டினார் ஸ்ரீகாந்த். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. . 

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Leave a Reply