சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?
Author: Prasad7 April 2025, 1:19 pm
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி
கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய “ஜவான்” திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து ஷாருக்கானின் இன்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த வெற்றி மொத்த இந்திய திரை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

அதே போல் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் அல்லு அர்ஜுன் “புஷ்பா” திரைப்படத்தின் மூலம் பேன் இந்தியா அளவில் பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
திடீரென வெளிவந்த போஸ்டர்…
அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் “மாஸும் மாயாஜாலமும் சந்திக்கும் ஒரு மிகச்சிறந்த படைப்பு, காத்திருங்கள்” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தை குறித்த அறிவிப்பைதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடப்போகிறது. அதற்கான முன்னறிவிப்பு போஸ்டர்தான் இது என இணையத்தில் சினிமா ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து “கூலி”, “ஜெயிலர் 2” ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதில் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீ-அல்லு அர்ஜுனை பிராஜெக்ட்டை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் வெளியிடும்போதுதான் தெரிய வரும்.