இருங்க பாய்.. கோர்ட் வாசலில் தயாரிப்பாளர் சங்கம்.. ரிவீவ்களுக்கு நீதிமன்றம் தடாலடி பதில்!
Author: Hariharasudhan3 December 2024, 1:30 pm
ஒரு படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.
சென்னை: தமிழ் சினிமா என்பது சுதந்திரத்துக்கு முன்பில் இருந்தே மிகவும் பெரிதாக பேசப்பட்ட ஒன்று. காரணம், ஆங்கிலேய ஆட்சி, வரி, கிஸ்தி என பல இருந்தும், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றின் பரிணாமமாக சினிமாவை வளர்த்தெடுத்ததில் தமிழர்களுக்கு அலாதியான பங்கு உண்டு.
அப்படிப்பட்ட தமிழ் சினிமா, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், கதை, வசனம், நடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றால் அடுத்தடுத்து பயணித்து வருகிறது. அதேநேரம், சினிமா வணிகமும் ஆயிரங்களில் இருந்து தற்போது கோடிக்கணக்கில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்றார்போல் சினிமாக் கலைஞர்களின் ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பும் ரசிகர்களை வைத்து கணக்கிடப்படுகிறது.
அப்படி, தமிழ் சினிமாவில் உள்ள உச்சபட்ச நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை, ஒவ்வொருவரும் தங்களுக்காக சினிமா வணிகத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா என்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களின் பெயர்களோடு வெளியாகின.
ஆனால், இவை அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவில்லை. அதற்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய சினிமாக்களைக் கொண்டாட தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இருந்தாலும், திரை விமர்சனம் என்ற மற்றொருபுறம் குற்றச்சாட்டு அடுக்கி வைக்கப்படுகிறது.
காரணம், படம் வெளியான நாளின் முதல் காட்சியில் இடைவேளையில் வெளியில் வருபவர்களிடமே சமூக வலைத்தள ஊடகங்கள் மைக்கை நீட்டுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இவர்களின் எதிர்மறை விமர்சனங்கள், இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக மக்களைச் சென்றடைவதால் தமிழ் சினிமா வணிகத்தில் சற்று சறுக்கலையேச் சந்தித்து வருகிறது எனலாம்.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், ஒரு திரைப்படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு எந்தவித திரை விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!
ஆனால், இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையின்போது, படம் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.