செய்தியாளர்கள் மீது பிரபல தெலுங்கு நடிகர் ஆக்ரோஷ தாக்குதல்.. வைரலாகும் வீடியோ!
Author: Hariharasudhan11 December 2024, 9:55 am
ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜலபள்ளியில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீடு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது மகனும் நடிகருமான மஞ்சு மனோஜ் – தந்தை மோகன் பாபு இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருவருக்கு ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவ்வாறு அளித்த புகார்களின் பேரில், இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மோகன்பாபுவின் மற்றொரு மகன் மஞ்சு விஷ்ணு இன்று வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத் வந்து உள்ளார். அவர் வருவதற்கு முன்பே அவரது தரப்பில் 30 தனிப் பாதுகாவலர்களும், மஞ்சு மனோஜ் தரப்பில் தனிப் பாதுகாவலர்கள் வீட்டில் குவிக்கப்பட்டனர்.
இதனால் காலை முதலே அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே, மஞ்சு மனோஜ் தனக்கும், தனது மனைவி, குழந்தைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில டிஜிபிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், மோகன் பாபு வீட்டிற்கு மஞ்சு மனோஜ் சென்ற வாகனத்தை விஷ்ணுவின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், செய்தி சேகரிப்பதற்காக உள்ளே சென்ற ஊடகவியலாளர்களை மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள் கடுமையாகத் தாக்கி கேமரா, மைக் ஆகியவற்றை உடைத்து அடித்து விரட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புஷ்பா-2 ஷூட்டிங்கில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க…வைரலாகும் புகைப்படம்..!
இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மீது நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் ஜலபள்ளியில் உள்ள அவரது வீட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.