பீஸ்ட் மாதிரி தான் துணிவும்… ஆனா அந்த ரிஸ்க் இருக்கே… ஹெச்.வினோத் ஓபன் டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2023, 5:02 pm
நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர்ந்து பயணித்து வரும் அஜித் – ஹெச் வினோத் கூட்டணி, மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு 11ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், டிசம்பர் 31ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகிருந்தது.
அப்போது துணிவு ட்ரெய்லர் விஜய்யின் பீஸ்ட் படம் போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அதுகுறித்து இயக்குநர் ஹெச் வினோத் வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகிறது.
துணிவு ப்ரோமோஷனுக்காக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த ஹெச் வினோத்திடம், துணிவு ட்ரெய்லர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் போல உள்ளது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹெச் வினோத், “ஒருவேளை இரண்டு படங்களுமே ஒரே படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றதால் அப்படி அவர்களுக்கு தோன்றிருக்கும். அதுவும் நல்லதுதான். அப்படி பீஸ்ட் படம் போல் உள்ளது என்று நினைத்து பார்ப்பவர்களுக்கு துணிவு அப்படி இல்லை என தெரியும், அப்போது துணிவு இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும். ஒரு வகையில் இதுவும் பெஸ்ட் புரோமஷன் தான்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் ஹீரோயிசம் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கும் வெளிப்படையாக பதிலளித்த ஹெச் வினோத், இங்கே எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும். அவர்கள் தங்கள் ஹீரோக்களை எப்படி எதிர்பார்ப்பார்கள் என்று காட்சிகள் வைக்க வேண்டும்.
எனக்கு அந்த மாதிரியான ஹீரோயிசத்தில் உடன்பாடில்லை தான். ஆனால், கமர்சியலாக பிஸினஸ் என்ற அடிப்படையில் பார்க்கும் போது நாம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அதுவும் அஜித் சாருடன் படம் பண்ணும் போது பார்க்கக் கூடாது. அப்படி முடியாது என்றால் அஜித் சாருடன் படம் பண்ண ஆசைப்படவே கூடாது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஹெச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டன. துணிவும் உண்மைச் சம்பவமா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹெச் வினோத், “உண்மைச் சம்பவங்களை படமாக எடுத்தா அதில் நிறைய பிரச்சினைகள் வரும். அஜித் சாரை வச்சுலாம் அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க முடியாது. நீ ஏன் இதெல்லாம் படமா எடுத்தேன்னு பிரச்சினை பண்ணுவாங்க” எனக் கூறியுள்ளார். மேலும் துணிவு படத்தின் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் அவர் நினைவு கூறியுள்ளார்.