‘லியோ’ படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..? ஷாக்கில் திரையுலகம்..!
Author: Rajesh26 February 2023, 1:30 pm
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது குறித்து டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.
இப்படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்தது. அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என இதுவரை 4 முறை ஜோடியாக நடித்த த்ரிஷா, தற்போது 5வது முறையாக லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், லியோ படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு அதிகபட்சமாக 3 முதல் 3.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.