“அது” ஒன்னு நடந்தா .. “நான் பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்” – வைரமுத்து பேச்சால் அதிர்ச்சியில் திரையுலகம்..!
Author: Vignesh4 October 2022, 3:24 pm
இலக்கிய அனுபவம், சினிமா பாடல்கள் குறித்து வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர்.
வைரமுத்து-சின்மயி சர்ச்சை:
அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார்.இருந்தும் வைரமுத்து தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வைரமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய இலக்கிய அனுபவம், சினிமா குறித்து கூறியிருந்தது, எல்லாரும் சேர்ந்து என்னுடைய தனிமையை காப்பாற்றிக் கொடுத்தால் நான் அனைவருக்குமே நன்றி உடையவனாகவே இருப்பேன். அந்த காலத்தில் படைப்பாளிகள் எல்லோருமே முனிவர்கள் ஆக இருப்பார்கள்.
வைரமுத்து அளித்த பேட்டி:
அதனால் காட்டுக்கு போய்விடுவார்கள். நான் இந்த டீசல் நாகரீகத்தில் டீசல் போல அலைந்து கொண்டிருக்கிறேன். பொருள் ஈட்டுகிற வாழ்க்கைக்கு மத்தியில் நான் இலக்கியம் படைக்கிறேன். இலக்கியம் மட்டும் படைத்துக் கொண்டிருங்கள் என்று என்னை சொன்னால் அந்த வாழ்வை நான் கொண்டாடுவேன். நான் ஒரு கவிதையின் நூலை வெளியிடுகிறேன். முதல் நாளிலேயே தமிழர்கள் ஒரு லட்சம் பிரதிகளை வாங்கிக் கொள்கிறார்கள் என்றால் நான் பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.
கவிதை குறித்து சொன்னது:
திரைப்படத்தில் பாட்டு எழுதுவதால் என்னுடைய ஆற்றல் சிதறுகிறது. கவிதை காணும் மையம் உடைகிறது. தமிழ் மக்கள் கவிதையை ஆதரிக்க வேண்டும். பாரதியார் இருந்த காலத்தில் சினிமாக்கள் இல்லை. அவருடைய காலத்தில் சினிமா இருந்திருந்தால் அவரே சினிமாவுக்கு வந்திருப்பார். வானம் எனக்கு ஒரு மகிழ்ச்சி, பரவசம். மேகங்கள் மாறிக்கொண்டிருப்பதை பார்ப்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம். வானம் மாறாது. ஆனால், வந்து போகும் மேகங்கள் மாறும். வானத்தின் நிறங்கள் மாறும்.
இயற்கை குறித்து சொன்னது:
காற்று மண்டலமும் சூரிய ஒளியும் கோலாட்டம் நடத்தும்போது வானத்தின் வண்ணங்கள் மாறும். ஆனால், மனிதர்கள் அதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். ஜன்னலை மூடிக்கொண்டு தொலைக்காட்சியை தான் பார்த்து காலத்தை போக்குகிறார்கள். தொலைக்காட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. வெளியே வந்து பாருங்கள். இயற்கையை கண்டு ரசியுங்கள். பறவைகளின் ஒலியை கேளுங்கள். வானத்தை பாருங்கள். இயற்கையுடன் பேசுங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.