வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…
Author: Prasad7 April 2025, 12:29 pm
யதார்த்த சினிமா
கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித் தெரு”, “அரவான்” போற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் ஜனரஞ்சக ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் சமீப காலமாக அவர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்த தலித் வரலாற்று மாத விழாவின் ஒரு பங்கான பிகே ரோசி திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குனர் வசந்தபாலன். அப்போது அவர் ரசிகர்களின் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னைய மன்னிச்சுடுங்க!
“ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இங்கு அதிகாரம் பற்றிய பார்வை, சாதி பற்றிய பார்வை இங்கு தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது. நிஜமாகவே நாகராஜ் முஞ்சுலே வந்த பிறகு, ரஞ்சித் வந்த பிறகு மாரி செல்வராஜ் உள்ளே நுழைந்த பிறகு அந்த மொத்த பார்வையும் மாறியது. வெயில் திரைப்படத்தில் பன்றி மேய்ப்பவரை நான் வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “நாம் சித்தரிக்கிற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சிறுபான்மையினராக தலித் கதாபாத்திரமாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் இரு பாலினரையும் மூன்றாம் பாலினத்தவரையும் எப்படி மரியாதையாக பார்க்கவேண்டும் என்பதிலும் கூடுதலான கவனத்தை மிக கூர்மையாக ரஞ்சித் தன்னுடைய வணிக திரைப்படங்களின் வாயிலாக எடுத்து வந்தது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. அந்த மாற்றம் மிக முக்கியமான மாற்றம். மொத்த தமிழ் சினிமாவையும் அது மாற்றிவிட்டது” எனவும் வசந்தபாலன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
