ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..
Author: Prasad2 April 2025, 2:01 pm
கலவையான விமர்சனம்
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. “மேக்கிங் மிகவும் யதார்த்தமாக இருந்தது, ஆனால் திரைக்கதையில் சற்று சருக்கல்” என்று பலரும் இத்திரைப்படத்தை குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமே முதலில் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு மூன்றாம் பாகமும் இருப்பதாக கூறப்படுகிறது.

தடைகளை தாண்டி வெளிவந்த படம்…
இத்திரைப்படத்தின் முதல் நாளில் காலை மற்றும் மதிய காட்சிகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்ற B4U நிறுவனம் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை விற்பதற்குள்ளாகவே தயாரிப்பாளர் ரியா ஷிபு இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டார். ஆதலால் இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை B4U வியாபாரம் செய்ய முடியவில்லை என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் B4U நிறுவனம் நீதிமன்றத்தை அணுக, இத்திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பின் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு சுமூக முடிவை எடுத்ததனால் இத்திரைப்படம் அன்று மாலையிலேயே வெளியானது. காலையில் இருந்து இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்தியது.
அந்த வலியை தாங்கிக்க முடியல…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “வீர தீர சூரன்” பட இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் மனம் நொந்தபடி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “நான் இயக்கிய எல்லா திரைப்படங்களும் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. இது மறுபடியும் நடக்கிறது என்கிறபோது எனக்கு வலி மிகுந்ததாக இருந்தது. இது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயமாக ஆகிப்போனது.
இத்திரைப்படத்தின் டீசர் கொஞ்சம் தாமதமாக வெளியானது. அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த ஒன்று. ஆனால் QUBEக்கு ஏற்றப்பட்டு KDM தயார் ஆன படம் வெளியாகவில்லை எனும்போது அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. திடீரென நீதிமன்றத்தில் Stay வாங்கிவிட்டார்கள். நான் ஆதரவில்லாதது போல் உணர்ந்தேன். வலி மிகுந்ததாக இருந்தது அது” என்று இயக்குனர் அருண் குமார் அப்பேட்டியில் மன வருத்ததுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.