அரசு சொத்தை விலைக்கு கேட்டது ஒரு காமெடி.. விக்னேஷ் சிவன் புது விளக்கம்!
Author: Hariharasudhan16 December 2024, 11:57 am
தான் புதுச்சேரியில் அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளியான தகவல் நகைச்சுவையான ஒன்று என இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்குப் பேசியதாக தகவல் வெளியான நிலையில், அமைச்சருடன் விக்னேஷ் சிவன் அமர்ந்து பேசும் புகைப்படங்களும் வெளியாகி, அதனை உறுதி செய்யும் வகையில் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார். அதில், “புதுச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் செய்தியை தெளிவுபடுத்துவதற்காககே இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் படப்பிடிப்பிற்காக, புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதற்காக அனுமதி பெற, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்க வேண்டி இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக என்னுடன் வந்த உள்ளூர் மேலாளர் ஒருவர், உணவகம் தொடர்பாக அமைச்சர் உடன் பேசினார். எனது சந்திப்பிற்குப் பிறகு இது நடந்தது. ஆனால், இது தவறுதலாக என்னுடன் இணைத்துப் பேசப்படுகிறது. அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் நகைச்சுவையாக இருந்தது; ஆனால், அது தேவையற்றது” எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா.. ஸ்ரீவி ஆண்டாள் கோயிலின் விளக்கம் என்ன?
நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன், தற்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் பட தலைப்பிற்கு பிரச்னை வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.