நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.
இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறி அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
பொது இடங்களில் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத விஜய் முதன் முறையாக மிகவும் உணவர்ச்சிவசப்பட்டு அழுதது விஜயகாந்த் மீதுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தியது. இதற்க்கெல்லாம் காரணமும் உண்டு, ஆம் விஜயகாந்த் விஜய்யின் ஆரம்ப கட்டத்தில் அவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவிகள் செய்துள்ளார். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
அந்த படத்திற்கு பிறகு விஜய் குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் நடிக்க விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்து அவரை ஒரு ஹீரோவாக பிரபலமாக்கினார். அதையெல்லாம் மறக்க முடியாமல் தான் விஜய் கேப்டனின் பூத உடலை பார்த்ததும் கதறி அழுதார்.
இந்நிலையில், விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பு எறிந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலானது. அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் இதுபோன்ற தவறாக எடிட் செய்த வீடியோ வெளியிட்டதால் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இது போன்ற இழிவான செயல்களை செய்ய வேண்டாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.