13 வருடங்களுக்குப் பிறகு மாஸ் காம்போவுடன் இணையும் விஜய் சேதுபதி!
Author: Hariharasudhan27 February 2025, 8:56 am
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ளார்.
சென்னை: இயக்குநர் அட்லீயின் ஏ பார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தினை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்க உள்ளார். இதற்கான முன்தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் மார்ச் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இவ்வாறு, அட்லீயின் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முன்னதாக, பாலாஜி – சேது இணைந்து, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் பணியாற்றினர். இதில், நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் நல்ல வரவேற்பையும், பல்வேறு விருதுகளையும் பெற்றுத் தந்தது.
ஆனால், விஜய் சேதுபதியின் 25வது படமாக வெளியான சீதக்காதி, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அடுத்ததாக இவர்கள் இணையவில்லை. இந்த நிலையில் தான், மகாராஜா, விடுதலை 2 என மாறுபட்ட ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி, மீண்டும் பாலாஜியுடன் இணைய உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, சரவணன், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: தமிழகம் ஒரு ஆன்மீக பூமி…கோவை ஈஷா மஹாசிவராத்திரியில் அமித்ஷா பேச்சு..!
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கி இருந்தார். அதேபோல், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடைசியாக ஒரு பக்க கதை என்ற படம், கடந்த 2020ல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
அதேநேரம், இயக்குநர் அட்லீ, காதல் கதையுடன் தொடங்கி, விஜயை வைத்து மூன்று கமர்ஷியல் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தினார். பின்னர், பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால், அட்லீ தயாரித்த, தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படம் சரிவர போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.