விஜய் அனுமதியும் கேட்கல… வரவும் இல்ல – உண்மையை உடைத்த விஜயகாந்த் மேனஜேர்!
Author: Rajesh3 January 2024, 4:41 pm
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
அதே போல் நடிகர் விஜய்யும் கேப்டனின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறி அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
பொது இடங்களில் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத விஜய் முதன் முறையாக மிகவும் உணவர்ச்சிவசப்பட்டு அழுதது விஜயகாந்த் மீதுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தியது. இதற்க்கெல்லாம் காரணமும் உண்டு, ஆம் விஜயகாந்த் விஜய்யின் ஆரம்ப கட்டத்தில் அவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவிகள் செய்துள்ளார். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
அந்த படத்திற்கு பிறகு விஜய் குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் நடிக்க விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்தார். அத்துடன் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்து அவரை ஒரு ஹீரோவாக பிரபலமாக்கினார். அதையெல்லாம் மறக்க முடியாமல் தான் விஜய் கேப்டனின் பூத உடலை பார்த்ததும் கதறி அழுதார்.
என்னதான் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தனது வளர்ச்சிக்கு மிகவும் உதவிய விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது அவரை ஒருமுறையாவது சென்று பார்த்திருக்கவேணும் என பலர் ஆதங்கத்தை கொட்டி விஜய்யை திட்டினார்கள். பின்னர் விஜய் விஜயகாந்தை சந்திக்க நிறைய முறை அப்பாயின்மென்ட் கேட்டும் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவே இல்லை என்று ஒரு செய்தி வெளியாகியது.
இது குறித்து விஜயகாந்தின் மேனஜர் கடுமையாக எதிர்த்துள்ளார். விஜய் அனுமதியும் கேட்கவில்லை வந்தும் பார்க்கவில்லை. விஜயகாந்தை பார்க்கவேண்டும் என கேட்ட எல்லோருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. அவ்வளவு பெரிய நடிகர் அவர் கேட்டு அனுமதி கொடுக்காமல் இருப்போமா? விஜயகாந்தே அப்படி செய்திருக்கமாட்டார் என அவரின் மேனேஜர் அந்த பேட்டியில் கூறினார்.