14 ஆண்டுகளுக்கு பிறகு குவா குவா சத்தம் : 43 வயதில் மீண்டும் தந்தையான விக்ரம் பட நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 2:42 pm

நிழல் கூத்து, 4 தி பீப்பிள் உள்ளிட்ட பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நரேன் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம் படங்களில் நடித்த நரேனுக்கு அஞ்சாதே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. அதன் பின்னர் தமிழில் வெளியான படங்கள் பெரிதாக கை கொடுக்காத நிலையில், மீண்டும் மலையாளத்திலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார் நரேன்.

மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும், குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த நடிகர் நரேனை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்த பெருமை லோகேஷ் கனகராஜை தான் சேரும். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நரேன்.

கைதி படத்திலேயே விக்ரம் படத்துக்கான லீடு நரேன் கொடுத்த நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி ரூ.450 கோடி வசூல் ஈட்டிய விக்ரம் படத்திலும் ஏஜென்ட் பிஜோய் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார் நரேன். கமல் சாரோட நடிக்கிற வாய்ப்பு கிடைத்ததே பெரிய பாக்கியம் என பூரித்து இருந்தார்.

நடிகர் நரேன் தனது 15வது திருமண ஆண்டில் தனது மனைவி மஞ்சு ஹரிதாஸ் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நடிகர் நரேனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் அறிவிப்பையும் போட்டோ போட்டு வெளியிட்டுள்ளார் நடிகர் நரேன்.

கடந்த 2007ம் ஆண்டு டிவி தொகுப்பாளினியான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நரேனுக்கு தன்மயா என்கிற பெண் குழந்தை அடுத்த ஆண்டே பிறந்தார். தற்போது அந்த பெண் குழந்தைக்கு 14 வயதாகும் நிலையில், நடிகர் நரேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நரேன் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ள அறிவிப்பை அறிந்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் நடிகர் நரேனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், சக நடிகர்கள் என பலரும் போனில் அழைத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!