நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?
Author: Hariharasudhan10 November 2024, 11:16 am
நெல்லையில் பிறந்த தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், நேற்று இரவு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார்.
சென்னை: சமீபத்தில் வெளியான ஒரு குறும்படம் ஒன்றில் டீக்கடையில் நடித்திருக்கும் கதாபாத்திரம் வரை தான் ஏற்ற வேடத்தை மிகச்சிறப்பாக நடித்து, தன்னை மெருகேற்றிக் கொண்டே இருந்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று காலமானார் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக தமிழ்த் திரையுலகில் இருந்து வருகிறது. 81 வயதான டெல்லி கணேஷ், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று காலமானார்.
இந்த நிலையில், அவரது இறப்புக்கு திரைத் துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1944ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் டெல்லி கணேஷ் பிறந்தார். குறிப்பாக, அவரது சொந்த ஊர் தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஆகும். பின்னர், 1964ஆம் ஆண்டு விமானப் படையில் சேர்ந்த டெல்லி கணேஷ், அங்கு பணி செய்யும் போதே நாடகங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், டெல்லியில் உள்ள தட்சிண பாரத நாடக சபா எனப்படும் நாடகக் குழுவில் இணைந்து பல்வேறு நாடகங்களில் பல வேடங்களை ஏற்று அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, 1964 – 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், திருமணத்திற்காக தமிழகம் திரும்பினார். இதையடுத்து, சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய அவர், நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இதைப் பார்த்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், 1977ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் என்ற படத்தில் அறிமுகம் செய்தார். எனவே, கணேசன் சென்ற பெயரை சினிமாவுக்கு ஏற்றார் போல் பாலச்சந்தர் மாற்றச் சொன்னதால், தனது பெயரை டெல்லி கணேஷ் என மாற்றினார். இந்தப் பெயரிலேயே 500க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், காமெடியன் மற்றும் குணச்சித்திரம் ஆகிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்கள் உடன் விஜய் திடீர் சந்திப்பு.. அரசியல் கணக்கில் அடுத்த படியா?
முக்கியமாக, கமல்ஹாசன் உடன் மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டெல்லி கணேஷின் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பு அனைவரையும் சிலாகித்து வருகிறது.