டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள்.. மகன் உணர்வுப்பூர்வ பகிர்வு!
Author: Hariharasudhan10 November 2024, 3:19 pm
இரவு மாத்திரை கொடுக்கச் சென்றபோது அவரது உடல் அசைவு இல்லாமல் இருந்தது என டெல்லி கணேஷின் மகனும், நடிகருமான மஹா கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்த்துறை உலகில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து மக்களின் மனங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். பழம்பெரும் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, கமல்ஹாசனுடன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனிக் கவனம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், நேற்று இரவு 11 மணி அளவில் காலமானார். இவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது குறித்தும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்தும் டெல்லி கணேஷின் மகனும், நடிகருமான மஹா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ” அப்பாவுக்கு 80 வயது. வயது முதிர்வின் காரணமாக சில உடல் பிரச்னைகள் அவருக்கு இருந்தது. வழக்கம்போல் நேற்றிரவு மாத்திரை கொடுக்கச் சென்றோம். அப்போது அவரின் உடலில் இருந்து எந்தவித அசைவும் இல்லை. பின்னர், மருத்துவரை அழைத்து சோதனை செய்தோம். அப்போதுதான், அப்பா (டெல்லி கணேஷ்) உயிரிழந்தது தெரிய வந்தது.
எனது அக்கா உடன் நேற்றிரவு எப்போதும் போல நன்றாகத் தான் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால், திடீரென இப்படி ஆகிவிட்டது. எங்களுக்கு இது மீள முடியாத இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ” என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?
அதேபோல், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ” மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார். மேலும், திரைத் துறையினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
0
0