பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!
Author: Hariharasudhan16 January 2025, 10:42 am
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். இந்த நிலையில், இன்று (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டில், கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது, நடைபெற்ற தகராறில் சைஃப் அலிகான் காயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கத்தியுடன் வந்த நபருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக சைஃப் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் கொண்டு செல்லப்பட்டார்” எனத் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியும், மருத்துவருமான நீரஜ் உத்தமானி கூறுகையில், “நடிகர் சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டுவடத்தின் அருகே இருந்தது.
எனவே, அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். மேலும் அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?
அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேற்படி தகவல்களைக் கூற முடியும்” என்றார். இதனிடையே, சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது மர்ம நபருடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்தாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் மும்பை போலீசார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.