பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
Author: Hariharasudhan16 December 2024, 7:56 pm
விலங்கு வெப் தொடர் இயக்குநர் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் மாமன் என்ற படத்தின் பூஜை இன்று திருச்சியில் போடப்பட்டது.
சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சூரி. இந்த நிலையில், இவர் திரில்லர் இணையத் தொடராக வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விலங்கு’ என்ற வெப் சீரிஸின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தை ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், இன்று (டிச.16) காலை திருச்சியில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘மாமன்’ என தலைப்பிடப்பட்டு உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். அது மட்டுமல்லாமல், முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். மேலும், ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருச்சியிலேயே முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ‘செல்ஃபி’ பட இயக்குநர் மதிமாறன் இயக்கும் படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார். இதற்காக முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், அதனை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் வெளியிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நாக்கைப் பிளந்து டாட்டூ.. ஏரியாவிற்கேச் சென்று ஏலியன்ஸ் கைது.. திருச்சியில் பரபரப்பு!
மேலும், சூரி, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை பாகம் 2, வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தின் தாக்கத்தால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், சுந்தரபாண்டியன், கருடன் உள்பட சசிகுமார் உடன் சூரி நடித்து வந்த நிலையில், அவரது பாணியையே சூரி பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. காரணம், சசிகுமாரின் ஆக்ரோஷமான பேச்சு, உறவுகள் குறித்த கதாபாத்திரம் ஆகியவை சூரிக்கு பொருத்தமாக உள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.