விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்
Author: Prasad31 March 2025, 5:05 pm
மோகன்லாலின் எம்புரான்…
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு இதே கூட்டணியில் உருவான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” தற்போது வரை உலகளவில் ரூ.170 கோடிகளுக்கும் மேல் வசூலாகியதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“எம்புரான்” திரைப்படத்தில் மோகலாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அரசியலை மையப்படுத்திய ஒரு ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ளது.

திடீரென வெடித்த சர்ச்சை
இத்திரைப்படம் வெளிவந்த நாளிலே இத்திரைப்படம் தொடர்பான சர்ச்சையும் கிளம்பியது. அதாவது இத்திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி பல காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. அந்த வகையில் மோகன்லால் தனது படக்குழுவின் சார்பாக மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட காட்சிகளில் 17 இடங்களில் நீக்கப்பட்டு சில வசனங்களும் மியூட் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தின் உண்மை பின்னணி?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனது வீடியோ ஒன்றில் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, “எம்புரான்” விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “மோகன்லால் எவ்வளவு பெரிய நடிகர். அவர் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு இந்த பிரச்சனை எந்தளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏதோ படக்குழுவினரே முன்வந்து காட்சிகளை நீக்கியது போல் செய்திகள் வருகின்றன.
ஆனால் பின்னணியில் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை எந்த ஊடகமும் பேசவே இல்லை. எம்புரான் படத்தில் மதவாதத்தை விமர்சனம் செய்த காட்சிகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டார்கள். இத்திரைப்படம் இந்து மக்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரான திரைப்படம்தானே? அதை சுட்டிக்காட்ட வேண்டியது கலைஞனின் கடமையே. அந்த கடமையை மோகன்லால் அழகாக செய்தார். அதை செய்யவிடாத அளவுக்கு இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்திருக்கிறது.
ஒரு விடுமுறை நாளில் இத்திரைப்படத்தை மறு சென்சார் செய்திருக்கிறார்கள். மறு சென்சார் படக்குழுவே மனமுவந்து செய்வதாக இருந்தால், சென்சார் அலுவலகம் இயங்குகிற வேலை நாட்களில் செய்யலாமே. ஆனால் விடுமுறை நாளில் மறு சென்சார் செய்தார் என்றால் அதற்கு இந்த அழுத்தம்தான் காரணம்” என்று தனது பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.