வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…
Author: Prasad31 March 2025, 1:18 pm
கலவையான விமர்சனம்…
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகமே தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருந்தால் முதல் பாகமே முதலில் வெளியாகும். ஆனால் முதலில் இரண்டாம் பாகம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டதால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.

மார்ச் 27 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வழக்குகளை எல்லாம் சந்தித்து பல தடைகளையும் தாண்டி அன்றைய நாள் மாலை முதல் காட்சி வெளியானது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “மேக்கிங் நன்றாக இருக்கிறது. யதார்த்தமான திரைக்கதை. ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் போதவில்லை” என கருத்து தெரிவித்தனர். இதன் மூலம் ஓரளவு கலவையான விமர்சனங்களே இத்திரைப்படம் பெற்று வருவதாக தெரிய வந்தது.
ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட சீயான் விக்ரம்…
இந்த நிலையில் திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் சீயான் விக்ரமும் கதாநாயகி துசாரா விஜயனும் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். அங்கே மாடு பிடி வீரர்களின் துணிச்சலை பார்த்து மிரண்டு போயினர். இதனை தொடர்ந்து மாடு பிடி வீரர்களிடைம் பேசிய விக்ரம், “சினிமாவில் நாங்கள் தான் ஹீரோ என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள்தான் உண்மையான ஹீரோ” என்று கூறியபோது மாடுபிடி வீரர்களிடம் உற்சாகம் பொங்கியது.
மேலும் பேசிய விக்ரம், “இந்த படத்துல நான் வீர தீர சூரன்னு சொல்லிக்கலாம். ஆனால் உண்மையாவே நீங்க எல்லோரும்தான் வீர தீர சூரன்” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியவுடன் வீரர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியில் கரகோஷம் விண்ணை பிளந்தது.
“வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .