படமாகும் தமிழ் சூப்பர் ஸ்டார் கைதான கதை.. யார் இந்த CL லட்சுமிகாந்தன்?
Author: Hariharasudhan29 November 2024, 6:44 pm
சினிமா இதழியலாளர் சிஎல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வெப் தொடராகும் நிலையில், இத்தொடர் விரைவில் SonyLiv-ல் வெளியாக உள்ளது.
சென்னை: The Madras Murder என்ற பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் சூரியபிரதாப் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்த வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல், நடிகர் ஷாந்தனு மற்றும் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்ற நடராஜ் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்தாலும், தற்போது தான் இதன் பணிகள் வேகம் எடுத்து உள்ளது.
இந்த வெப் தொடரானது, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த எம்கே தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் ஆகியோர், சினிமா செய்தியாளர் ஒருவரின் கொலையில் கைதாகி, பின்னர் விடுதலையாகி மீண்டும் சினிமாவில் சந்தித்தது என்ன என்பது குறித்து உருவாகுகிறது.
யார் இந்த சிஎல் லட்சுமிகாந்தன்? இரண்டாம் உலகப்போர் மூண்ட காலத்தில் பசி, பஞ்சம் என இருந்த நிலையில், காகிதங்களின் தட்டுப்பாடும் உலக அளவில் இருந்தது. அப்போது, அதாவது 1940ஆம் ஆண்டுகளில் ‘சினிமா தூது’ என்ற பத்திரிகையைத் தொடங்கி கவனம் ஈர்த்தார் சிஎல் லட்சுமிகாந்தன் (CL Lakshmikanthan).
இதற்கு, காகித தட்டுப்பாட்டில் பத்திரிகையைத் தொடங்கியது காரணம் அல்ல, மாறாக, அவர் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அந்தரங்க வாழ்க்கை குறித்து எழுதினார். இதுவே, தமிழ் சினிமாவின் முதல் கிசுகிசு பத்திரிகை என்று இன்றளவும் சொல்லப்படுகிறது.
இப்படி இருக்க, அந்த பத்திரிகையில், அப்போது சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த எம்கே தியாகராஜ பாகவதர் (M.K.Thyagaraja bhagavathar), கலைவாணர் எனப் போற்றப்பட்ட நகைச்சுவை ஜாம்பவான் என் எஸ் கிருஷ்ணன் (NS Krishnan) மற்றும் கோவை பச்சிராஜா ஸ்டுடியோ உரிமையாளரும், இயக்குனருமான ஸ்ரீ ராமுலு நாயுடு ஆகியோரின் அந்தரங்கங்கம் குறித்தும் லட்சுமிகாந்தன் எழுதியுள்ளார்.
இது ஒருகட்டத்தில் அதிகமாகவே, இது குறித்து அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் ஆர்தர் ஆஸ்வால்டு என்பவரிடம் மூவரும் சேர்ந்து புகார் அளித்து உள்ளனர். இதன் பேரில், லட்சுமிகாந்தன் நடத்தி வந்த பத்திரிகையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், இதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, தொழிலதிபர் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களையும் எழுதத் தொடங்கி உள்ளார். அந்த நேரத்தில், தன்னைப் பற்றியான அந்தரங்கப் பகுதிகளை எழுதிவிடக் கூடாது என லட்சுமிகாந்தனுக்கு சில முக்கியப் புள்ளிகள் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சொந்தமாக அச்சகம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், சரியாக 1944ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, சென்னை புரசைவாக்கம், வேப்பேரியில் உள்ள தனது வழக்கறிஞர் வீட்டுக்குச் சென்ற லட்சுமிகாந்தன், மீண்டும் சைக்கிள் ரிக்ஷா மூலம் திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: சமந்தா தந்தை திடீர் மறைவு… ஒரே ஒரே செய்தியால் இடிந்து போன குடும்பம்!
அப்போது அவரை வழிமறித்த கும்பல், அவரது உடலில் 3 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் வழக்கறிஞர் வீட்டுக்கு ரத்தம் வழிந்த நிலையில் சென்றுள்ளார். பின்னர், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சென்னை சென்ட்ரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சையில் இருந்தபோதும் கூட சுயநினைவில் இருந்ததாகவும், ராமேஸ்வரம் போட் மெயில் கொலைச் சம்பவத்தில் நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என தனது சக நண்பர்களிடம் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், மறுநாள் அதிகாலையிலே லட்சுமிகாந்தன் மரணமடைந்தார். இதனையடுத்து, இந்த மரணம் தொடர்பாக எம்கே தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமலு நாயுடு உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, அப்போது இருந்த பொதுமக்களை உள்ளடக்கிய நடுவர் குழு விசாரித்து, ஸ்ரீராமுலு நாயுடு தவிர இருவருக்கும் ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பானது.
இதனையடுத்து, இது தொடர்பாக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், உயர் நீதிமன்றமும் நடுவர் குழுவின் தீர்ப்பை உறுதி செய்தது. பின்னர், லண்டன் பிரிவியூ கவுன்சிலில் (உச்ச நீதிமன்றம் இல்லாத காலம்) மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன் பேரில் மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க, லண்டன் பிரிவியூ கவுன்சில் உத்தரவிட்டது. இதன் பேரில் நடைபெற்ற விசாரணையில், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தனர். இதனால், அவர்கள் சேர்த்து வைத்த புகழ், பொருள் என அனைத்தும் மாறிப்போனதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரே, அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.
குறிப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பல செய்தித் தளங்களில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும்.