ஒரு சிலர் காய்கறிகளை காட்டிலும் மீனை பிரியமாக சாப்பிடுவார்கள். அதிலும் வறுத்த மீன் என்றால் சொல்லவே வேண்டாம், கணக்கே இல்லாமல் சாப்பிடுவார்கள். இது மாதிரியான நபர்களுக்கு ஒரே மாதிரியாக எப்பொழுதும் மீன் வருவல் செய்யாமல், சற்று வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் உங்களுக்கு பாராட்டு நிச்சயம். இப்பொழுது வித்தியாசமான முறையில் மீன் வருவல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
10 சின்ன வெங்காயம்
ஏழு பல் பூண்டு
ஒரு துண்டு இஞ்சி
1/2 கைப்பிடி கொத்தமல்லி தழை
2 கொத்து கருவேப்பிலை ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1/2 ஸ்பூன் மல்லி பொடி
1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
1/4 ஸ்பூன் சீரகத்தூள்
ஒரு டீஸ்பூன் அரிசி மாவு 1/2 மூடி எலுமிச்சை பழம் தேவையான அளவு உப்பு
செய்முறை விளக்கம்:
மீன் வறுவல் செய்வதற்கு தேவையான மசாலாவை முதலில் அரைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்க்கவும். இதனோடு தோல் உரித்த பூண்டு, இஞ்சி, இரண்டு கொத்து கருவேப்பிலை, அரை கைப்பிடி கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த பேஸ்ட்டை வேறொரு பௌலுக்கு மாற்றி அதனுடன் மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியில் அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றி பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள். இதை கழுவி சுத்தம் செய்து எடுத்துள்ள மீன் மீது தடவவும். மசாலாவை தடவும் முன்பு மீனை ஒரு கத்தி வைத்து ஆங்காங்கே கீறல் போட்டுக் கொள்ளவும். மீனின் எல்லா இடங்களிலும் படுமாறு மசாலாவை தடவவும்.
மீன் பத்து நிமிடங்கள் ஊறட்டும். இப்பொழுது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்த பின் ஊற வைத்த மீனை போட்டு இருபுறமும் சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் அசத்தலான மீன் வருவல் தயார். இதை ஒரு முறை செய்தால் இனி இந்த ஸ்டைலை தான் நிச்சயமாக மீன் வறுத்து சாப்பிடுவீர்கள்.