இந்த மாதிரி மொறு மொறுப்பான சேனைக்கிழங்கு ரோஸ்ட் இதுவரை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!
Author: Hemalatha Ramkumar29 March 2023, 7:36 pm
சேனைக்கிழங்கு வைத்து ஏராளமான உணவு வகைகளை சமைத்து சாப்பிடலாம். அதில் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவது என்னமோ சேனைக்கிழங்கு வறுவல் மற்றும் ரோஸ்ட் தான். ஆகையால் இந்த பதிவில் பலருக்கும் பிடித்த சேனைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வது என பார்க்கலாம்.
ரோஸ்ட் செய்வதற்கு முதலில் சேனைக்கிழங்கினை தோல் சீவி, நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சேனைக்கிழங்கை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
இதனோடு 1/4 தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும். சேனைக்கிழங்கு பாதி வெந்ததும் அடுப்பை அணைத்து தண்ணீரை வடிகட்டி கிழங்கை தனியாக வைக்கவும்.
இப்போது கடாயில் 5 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வேக வைத்த சேனைக்கிழங்கு சேர்த்து பொரித்து எடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொரித்து வைத்த சேனைக்கிழங்கு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடங்கள் மீடியம் ஃபிளேமில் வைத்து கிளறி அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான்… மொறு மொறுப்பான சேனைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.