சட்டென்று தயாராகும் ஆந்திரா ஸ்பெஷல் டிபன் சாம்பார்!!!

Author: Hemalatha Ramkumar
16 April 2023, 7:36 pm

தமிழகத்தில் சாம்பாருக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அதேபோல பிற மாநிலங்களிலும் சாம்பாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாம்பாரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக செய்வார்கள். அப்படி ஆந்திராவின் ஸ்பெஷல் சாம்பார் ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆந்திரா ஸ்பெஷல் சாம்பார் செய்வதற்கு முதலில் ஒரு குக்கரை எடுத்து அதில் 1/4 கப் அளவு துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு நறுக்கிய தக்காளி, மூன்று பச்சை மிளகாய், நான்கு பற்கள் பூண்டு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி உப்பு, ஒரு துண்டு மஞ்சள் பூசணிக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

இதனை அடுப்பில் வைத்து இரண்டு முதல் மூன்று விசில் வரவிட்டு அடுப்பை அணைக்கவும். குக்கர் பிரஷர் அடங்கும் வரை இந்த சாம்பாருக்கு தேவையான ஒரு மசாலாவை செய்து கொள்ளலாம். இதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி தனியா, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம்.

பிறகு 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் நாம் வேகவைத்து வைத்த பருப்பு கலவையை மத்து கொண்டு கடைந்து இதில் ஊற்றவும். அடுத்து நாம் அரைத்து வைத்த மசாலாவில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

சாம்பார் நன்றாக கொதித்தவுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது மண மணக்கும் ஆந்திரா ஸ்பெஷல் சாம்பார் தயாராக உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி